Friday, August 12, 2011

புகையோடு பகை...!


புகையதை உறிஞ்சியே இழுப்பதில் இன்பமா?
          புன்னகைதனை இழந்துநீ தவித்திட வேண்டுமா?
சிகையது நரைக்குமுன் மரித்திட ஆர்வமா?
          சிந்தனைசெய் துணர்ந்திட மறுப்பதும் நியாயமா?


வகைவகை உணவுபோல் சுவையதில் ஏதடா? - அது
           விரல்களில் தரிப்பதும் வினாடிகள் தானடா
மிகையில்லா ஊதியம் விரயமும் ஏனடா? - உன்
           மனமதை நாடினால் மகிழ்வுதான் வீணடா


தகைமைகள் தந்துணை உயர்த்திடப் போகுதா?
           தடைக்கல்லாய் நிமிர்ந்துநின் றுயர்ந்திடப் போகுதா?
தொகைபணம் ஈட்டிட வழியினைக் காட்டுதா?
            தொடருமுன் வாழ்வினில் துயரினைக் கூட்டுதா?


திகைப்புடன் துணிந்துநீ தீமையைச் செய்வதேன்?
           துதித்திடும் பெற்றவர்க்கு தவிப்பினை தருவதேன்?
நகைப்புடன் உறவுகள் நிலைப்பதை கெடுப்பதேன்?
          நலந்தராச் செயல்தனில் நாளும்நீ தொலைவதேன்?


குகைகொண்ட இருளதாய் கொடுமைகள் நிறையுமே - உன்
           குணமதில் கனிவுநல் லிரக்கமும் குறையுமே
பகைகொள்ளு மானிடா புகையுடன் உறவினை
          பயனுள்ள மனிதனாய் வாழ்ந்துசெய் நல்வினை

தாயவளைப் போற்றுவோம்....!


கணவனின் துணையுடன் கனிந்திடும் சுகமது
கருவுருப் பெருகையில் கலைத்ததைக் கொன்றிடா
மனதுடன் சுமந்ததற் குயிருடல் தந்திடும்
மகத்துவ மானதாயை போற்றுவோம் நாளெல்லாம்.


அளந்ததே கிடைத்திடும் நிலையில்லா வாழ்வினில்
அளவில்லா அன்பினை அள்ளியே வழங்கிடும்
தலமெனத் தரணியில் திகழ்ந்திடும் தாயவள்
தயவினை நயத்துநாம் போற்றுவோம் நாளெல்லாம்.


தன்னுயிர், தன்னுடல், தன்பசி தேவைகள்
தன்னிளம் பிள்ளைமுன் பின்னிலை தானென
எண்ணியே எண்ணிலா துன்பங்கள் தாங்கிடும்
ஏற்றம்மிகுந்த தாயை போற்றுவோம் நாளெல்லாம்.


மதங்கூறு மறநெறியை நிதமேற்று நடப்போரை
மற்றோருக் காய்வாழ்ந்ந மரியாதைக் குரியோரை
மதிநுட்ப மதிலுலகை முன்னேரச் செய்தோரை
மண்தரையி லீன்றவளை போற்றுவோம் நாளெல்லாம்


வளர்ந்தபின் வாழ்வதை வழங்கிய அன்னையை
விரட்டிடும் கீழ்த்தரக் குணம்படைத் தோரையும்
தளர்ந்திடா மனதுடன் வாழ்த்திடு மொரேயுயிர்
தாய்மைதான் அவளைநாம் போற்றுவோம் நாளெல்லாம்.

ஒரு பிஞ்சுத் தொழிலாளியின் நெஞ்சம்...!


அள்ளி அணைத்திட ஆதரவாகிட
அன்பினைக் காட்டிட அன்னமும் ஊட்டிட
கிள்ளிக் கதைத்தென்னை கொஞ்சி மகிழ்ந்திட
கல்ல மில்லாதஎன் தாயவள் இல்லையே


துள்ளித் திரிந்திட தொல்லை புரிந்திட
தோளில் அமாந்திட பாடலும் பாடிட
துள்ளிடும் ஆசையை சொல்லி அடைந்திட
தாங்கி வளர்த்தஎன் தந்தையும் இல்லையே


தஞ்சம் அடைந்திட தயவினை வேண்டிட
தனிமையை மறந்திட துணையுடன் இருந்திட
நெஞ்சு நெகிழ்ந்திடும் வார்த்தைகள் கேட்டிட
நேசம் நிறைந்தநல் உறவுகள் இல்லையே


துயரத்தைச் சொல்லிட தோளிலே சாய்ந்திட
துணிவினைக் காட்டிட தைரியம் ஊட்டிட
உயிரினைப் பாதியாய் பங்கு பிரித்திட
உன்னத மானஓர் நண்பனும் இல்லையே


புத்துடை அணிந்திட புத்துணர் வடைந்திட
புதுமைகள் செய்திட புவியதை வென்றிட
புத்தகம் எடுத்துநல் பாடமும் படித்திட
பள்ளிக்குச் சென்றிடும் பாக்கியம் இல்லையே


கஞ்சி குடித்திட காலம் கழித்திட
கஷ்டங்கள் தீர்ந்திட கண்கள் உறங்கிட
வெஞ்சி உழைத்திடும் விடலைப் பருவம்நான்
விளையாடி மகிழ்ந்திட வழிகளும் இல்லையே

துயர் மீள வழியில்லை....!


உறவு கொள்ள ஒரு உயிரில்லை
உறக்கம் கொள்ள சிறு இடமில்லை
பரிவு காட்ட ஒரு உள்ளமில்லை
பசிக்கு உண்ண துளி உணவில்லை


தென்றல் மட்டும் தீண்டிச் செல்கிறது
தெருவோர நீர்என் உயிரை காக்கிறது
மன்றம் என்னைத் தாங்கிக் கொள்கிறது
மறையும் இரவது உறவு கொள்கிறது


ஐந்து வயதினில் தாயை இழந்தேன்
ஆராம் வயதினில் பட்டினியடைந்தேன்
பந்துபோல் பலர் உதைத்திட அழுதேன்
பசியைத் தீர்த்திட பலரையும் தொழுதேன்


கஞ்சன் அவனும் என்னைக் கண்டால்
காறி உமிழ்வான் முகத்தின் முன்னே
தஞ்சம் கொடுத்த பூமியில் மனிதர்
தருவது தினமும் வார்த்தைப் பரிசு


காட்டில் மானும் ஒரு பிறவி - அதற்கு
கரடி, புலிகள்போல் இல்லை உறுதி
நாட்டில் நானும் ஒரு பிறவி - எதையும்
நாட முடியாத புதத் துறவி


இன்பம் துன்பம் வாழ்க்கை நியதி
இரவும் பகலும் இயற்கை நியதி
துன்பம் மட்டுமே என் தலைவிதி
துயரை மீண்டிட இல்லை ஒருகதி

உடந்தையா சொல் தாயே....?


துயர்சகித்து ஈன்றிந்தத் தரையினிலே உன்மகனை
துயிலிழந்து துணைநின்று தோளினிலே தயங்கிநிதம்
உயிர்மூச்சில் அவனுருவை உன்னதமாய்ப் பதித்திருந்தே
உயரியதாய்ப் பணிபுரிந்தும் ஊதியம்தான் கேட்டாயா ?

விடிகாலை புலருமுன்னே விரகொடித்து அடுப்பெரித்து
வடிந்தோடும் வியர்வைதனை பொருட்படுத்தா நெஞ்சமுடன்
படியேறிப் பலரிடத்தில் விற்பதற்காய் அப்பம்செய்து
படிப்பித்தாய் உன்மகனை பிரதிபலன் கேட்டாயா ?

கறையில்லாக் கல்விதனை முறையாகக் கற்றமகன்
கரைசேர்ந்து ஓர்தொழிலில் கைநிறையக் காசுழைத்து
நிறைவோடு நிம்மதியாய் வாழுவதைக் காணுகையில்
நரைகூந்தல் கொண்டநீயோ பங்கெதுவும் கேட்டாயா ?

பத்திரமாய் இத்தனைநாள் பாதுகாத்த மகனவனும்
புத்துறவாம் இல்லறத்தில் இணைகின்ற போதுமட்டும்
சொத்துபணம் லட்சமுடன் வீடதுவும் வேண்டுமென
சத்தமி(ட்டு)ன்றி சீதனமாய் கேட்பதுவும் ஏன்தாயே ?

எண்ணில்வரா சிரமங்களை ஏற்றுநீயும் தாங்கியது
என்றிந்தும் சீதனமாய்க் கூலிகிட்டும் எனத்தானோ ?
கண்கலங்கி வாழுமிந்தக் கன்னியரின் துயர்நிலைக்கு
கண்ணியங்கள் கொண்டநீயும் உடந்தையா சொல்தாயே ?

நாடு செழிக்கட்டும்....!


வெறுப்புகள் மனங்களிலே தணியட்டும் - மர
வேர்போல அமைதியது பிணையட்டும்
பொறுப்புகள் உரியவரில் பொருந்தட்டும்
போர்புரியும் உள்ளங்கள் திருந்தட்டும்
உறுப்புகள் நல்லதையே செய்யட்டும்
ஊரெங்கும் ஒற்றுமையே தொய்யட்டும்


துடிப்புடனே இளைஞர்கள் உழைக்கட்டும்
துயரற்ற நல்வாழ்வு நிலைக்கட்டும்
பிடிப்புடனே பிள்ளைகள் படிக்கட்டும்
பயனள்ள கல்வியது கிடைக்கட்டும்
முடிப்புடைய ஆசைகள் எட்டட்டும்
முயற்சிக்கு நற்கூலி கிட்டட்டும்


கோத்திரக் கொள்கைகள் ஒழியட்டும் - யாரும்
குலம் ஒன்றென்பதையே மொழியட்டும்
பாத்திரம் தெய்ப்பவரும் மகிழட்டும்
பலம்கொண்ட கரங்களையே புகழட்டும்
சாத்திர சூனியங்கள் அழியட்டும்
சலிப்பற்ற எதிர்காலம் தெளியட்டும்


காட்டினில் மரம்செடிகள் செழிக்கட்டும்
கலங்காத காலநிலை சொலிக்கட்டும்
வீட்டினில் சிரிப்பொலியே உலவட்டும்
விலகிடா வசந்தமதும் நிலவட்டும்
நாட்டினில் நன்மைகளே சூழட்டும்
நலமுடனே மானிடர்கள் வாழட்டும்

மணமகள் தேவை.....!


பொன்னோடு பொருளெதுவும் வேண்டியது இல்லை
பண்புள்ள பெண்ணவளாய் இருந்திட்டால் போதும்
மண்ணோடு மாளிகையும் கேட்பதுவும் இல்லை
மனமுவந்து வாழும்நல்ல மங்கையவள் போதும்


சீதனங்கள் சீர்வரிசை நாடுவதும் இல்லை
சிந்தைநிறை அன்புடைய சிநேகிதியே போதும்
சாதனமாய் வேறுபொருள் சதமும் தேவையில்லை
சத்தியத்தை சொத்ததுவாய் மதிப்பவளே போதும்


அழகமுகம் இழகுநடை முக்கியமாய் இல்லை
அனுசரித்து நடக்குமுயர் பண்பிருந்தால் போதும்
புழக்கமொழி ஆங்கிலமாய் அவசியமும் இல்லை
புரியுமெங்கள் இனியதமிழ் பாசையதே போதும்


உயர்படிப்பு உத்தியோகம் இருக்கத் தேவையில்லை
உண்மைவழி நடப்பவளாய் இருப்பதுவே போதும்
துயர்வருத்தும் ஏழைஎன்ற பிரச்சினையும் இல்லை
துன்பத்திலும் துணிவிழக்காத் திடமிருந்தால் போதும்


பொதுவுலகில் நடப்பதுபோல் நான் நடப்பதில்லை
புதுத்துணையாய் வருபவளை துண்புறுத்துவதில்லை
மது, சூது, புகைப்பழக்கம் என்னிடத்தில் இல்லை
மனைவியாக வருபவளோ அஞ்சத் தேவையில்லை

பெண் உலகில் உயர்ந்தவள்....!


உயிருடல் இரண்டையும் உரிமையாய் சுமந்தவள்
உதிரத்தோடு உணர்வையும் பாலெனச் சுரந்தவள்
துயிலுரும் பொழுதிலும் தூக்கத்தை இழந்தவள்
துணிவுடன் பணிவிடை புரிவதில் சிறந்தவள்
உயரிய துயரிலும் உருகிடாது இருந்தவள்
உலகினைத் தந்தஎன் தாயவள் உயர்ந்தவள்!


தவள்ந்திடும் வயதிலென் கரம்பிடித் தெழுந்தவள்
தந்தையின் பார்வையில் திரம்பட வளர்ந்தவள்
கவளமாம் உணவையும் மகிழ்வுடன் பகிர்ந்தவள்
கனிவுடன் தாயிடம் பரிந்துறை புரிந்தவள்
துவள்ந்திடும் ஆசையை தூசென நினைப்பவள்
தூய்மையாய் வாழுமென் தங்கையும் உயர்ந்தவள்!


பள்ளியில் பயில்கையில் பக்கமாய் வந்தவள்
பணிவுடன் பழகிடும் பக்குவம் கொண்டவள்
புள்ளிகள் பெற்றிட உறுதுணை ஆனவள்
புத்தியை தொட்டிடும் அறிவுறை சொன்னவள்
தள்ளியே சென்றினும் மனதினால் துதிப்பவள்
தயவினில் உயர்ந்துநற் தோழியாய் நிற்பவள்!


நல்லோர்கள் வாழ்த்திட இல்லாளாய் இணைந்தவள்
நாள்தோரும் இல்வாழ்வில் இளமையை பிணைந்தவள்
இல்லாதஒரு நிலமையிலும் இணங்கிவாழ துணிந்தவள்
இருக்கின்ற தைவைத்து இனிதாக்கத் தெரிந்தவள்
பொல்லூண்டும் காலத்திலும் என்தோளைப் பிடிப்பவள்
பொறுமையில் உயாந்துஎன் மனைவியாய் நிலைத்தவள்!


தாய்மையெனும் தகைமையை தன்னுடனே கொண்டவள்
தியாகங்கள் புரிவதிலே முன்னிலையை கண்டவள்
தூய்மையுடன் துணிந்துபல தொண்டுகளும் செய்பவள்
தேசம்தனை ஆளுகின்ற தகுதியதும் உள்ளவள்
வாய்மைனில் நேர்மையினை வாழ்வினிலே காப்பவள்
வனப்புமிகு பெண்ணவள் பாரினிலே உயாந்தவள்!