துயர்சகித்து ஈன்றிந்தத் தரையினிலே உன்மகனை
துயிலிழந்து துணைநின்று தோளினிலே தயங்கிநிதம்
உயிர்மூச்சில் அவனுருவை உன்னதமாய்ப் பதித்திருந்தே
உயரியதாய்ப் பணிபுரிந்தும் ஊதியம்தான் கேட்டாயா ?
விடிகாலை புலருமுன்னே விரகொடித்து அடுப்பெரித்து
வடிந்தோடும் வியர்வைதனை பொருட்படுத்தா நெஞ்சமுடன்
படியேறிப் பலரிடத்தில் விற்பதற்காய் அப்பம்செய்து
படிப்பித்தாய் உன்மகனை பிரதிபலன் கேட்டாயா ?
கறையில்லாக் கல்விதனை முறையாகக் கற்றமகன்
கரைசேர்ந்து ஓர்தொழிலில் கைநிறையக் காசுழைத்து
நிறைவோடு நிம்மதியாய் வாழுவதைக் காணுகையில்
நரைகூந்தல் கொண்டநீயோ பங்கெதுவும் கேட்டாயா ?
பத்திரமாய் இத்தனைநாள் பாதுகாத்த மகனவனும்
புத்துறவாம் இல்லறத்தில் இணைகின்ற போதுமட்டும்
சொத்துபணம் லட்சமுடன் வீடதுவும் வேண்டுமென
சத்தமி(ட்டு)ன்றி சீதனமாய் கேட்பதுவும் ஏன்தாயே ?
எண்ணில்வரா சிரமங்களை ஏற்றுநீயும் தாங்கியது
என்றிந்தும் சீதனமாய்க் கூலிகிட்டும் எனத்தானோ ?
கண்கலங்கி வாழுமிந்தக் கன்னியரின் துயர்நிலைக்கு
கண்ணியங்கள் கொண்டநீயும் உடந்தையா சொல்தாயே ?
No comments:
Post a Comment