Friday, August 12, 2011

மணமகள் தேவை.....!


பொன்னோடு பொருளெதுவும் வேண்டியது இல்லை
பண்புள்ள பெண்ணவளாய் இருந்திட்டால் போதும்
மண்ணோடு மாளிகையும் கேட்பதுவும் இல்லை
மனமுவந்து வாழும்நல்ல மங்கையவள் போதும்


சீதனங்கள் சீர்வரிசை நாடுவதும் இல்லை
சிந்தைநிறை அன்புடைய சிநேகிதியே போதும்
சாதனமாய் வேறுபொருள் சதமும் தேவையில்லை
சத்தியத்தை சொத்ததுவாய் மதிப்பவளே போதும்


அழகமுகம் இழகுநடை முக்கியமாய் இல்லை
அனுசரித்து நடக்குமுயர் பண்பிருந்தால் போதும்
புழக்கமொழி ஆங்கிலமாய் அவசியமும் இல்லை
புரியுமெங்கள் இனியதமிழ் பாசையதே போதும்


உயர்படிப்பு உத்தியோகம் இருக்கத் தேவையில்லை
உண்மைவழி நடப்பவளாய் இருப்பதுவே போதும்
துயர்வருத்தும் ஏழைஎன்ற பிரச்சினையும் இல்லை
துன்பத்திலும் துணிவிழக்காத் திடமிருந்தால் போதும்


பொதுவுலகில் நடப்பதுபோல் நான் நடப்பதில்லை
புதுத்துணையாய் வருபவளை துண்புறுத்துவதில்லை
மது, சூது, புகைப்பழக்கம் என்னிடத்தில் இல்லை
மனைவியாக வருபவளோ அஞ்சத் தேவையில்லை

No comments:

Post a Comment