Friday, August 12, 2011

ஒரு பிஞ்சுத் தொழிலாளியின் நெஞ்சம்...!


அள்ளி அணைத்திட ஆதரவாகிட
அன்பினைக் காட்டிட அன்னமும் ஊட்டிட
கிள்ளிக் கதைத்தென்னை கொஞ்சி மகிழ்ந்திட
கல்ல மில்லாதஎன் தாயவள் இல்லையே


துள்ளித் திரிந்திட தொல்லை புரிந்திட
தோளில் அமாந்திட பாடலும் பாடிட
துள்ளிடும் ஆசையை சொல்லி அடைந்திட
தாங்கி வளர்த்தஎன் தந்தையும் இல்லையே


தஞ்சம் அடைந்திட தயவினை வேண்டிட
தனிமையை மறந்திட துணையுடன் இருந்திட
நெஞ்சு நெகிழ்ந்திடும் வார்த்தைகள் கேட்டிட
நேசம் நிறைந்தநல் உறவுகள் இல்லையே


துயரத்தைச் சொல்லிட தோளிலே சாய்ந்திட
துணிவினைக் காட்டிட தைரியம் ஊட்டிட
உயிரினைப் பாதியாய் பங்கு பிரித்திட
உன்னத மானஓர் நண்பனும் இல்லையே


புத்துடை அணிந்திட புத்துணர் வடைந்திட
புதுமைகள் செய்திட புவியதை வென்றிட
புத்தகம் எடுத்துநல் பாடமும் படித்திட
பள்ளிக்குச் சென்றிடும் பாக்கியம் இல்லையே


கஞ்சி குடித்திட காலம் கழித்திட
கஷ்டங்கள் தீர்ந்திட கண்கள் உறங்கிட
வெஞ்சி உழைத்திடும் விடலைப் பருவம்நான்
விளையாடி மகிழ்ந்திட வழிகளும் இல்லையே

No comments:

Post a Comment