புகையதை உறிஞ்சியே இழுப்பதில் இன்பமா?
புன்னகைதனை இழந்துநீ தவித்திட வேண்டுமா?
சிகையது நரைக்குமுன் மரித்திட ஆர்வமா?
சிந்தனைசெய் துணர்ந்திட மறுப்பதும் நியாயமா?
வகைவகை உணவுபோல் சுவையதில் ஏதடா? - அது
விரல்களில் தரிப்பதும் வினாடிகள் தானடா
மிகையில்லா ஊதியம் விரயமும் ஏனடா? - உன்
மனமதை நாடினால் மகிழ்வுதான் வீணடா
தகைமைகள் தந்துணை உயர்த்திடப் போகுதா?
தடைக்கல்லாய் நிமிர்ந்துநின் றுயர்ந்திடப் போகுதா?
தொகைபணம் ஈட்டிட வழியினைக் காட்டுதா?
தொடருமுன் வாழ்வினில் துயரினைக் கூட்டுதா?
திகைப்புடன் துணிந்துநீ தீமையைச் செய்வதேன்?
துதித்திடும் பெற்றவர்க்கு தவிப்பினை தருவதேன்?
நகைப்புடன் உறவுகள் நிலைப்பதை கெடுப்பதேன்?
நலந்தராச் செயல்தனில் நாளும்நீ தொலைவதேன்?
குகைகொண்ட இருளதாய் கொடுமைகள் நிறையுமே - உன்
குணமதில் கனிவுநல் லிரக்கமும் குறையுமே
பகைகொள்ளு மானிடா புகையுடன் உறவினை
பயனுள்ள மனிதனாய் வாழ்ந்துசெய் நல்வினை
No comments:
Post a Comment