உறவு கொள்ள ஒரு உயிரில்லை
உறக்கம் கொள்ள சிறு இடமில்லை
பரிவு காட்ட ஒரு உள்ளமில்லை
பசிக்கு உண்ண துளி உணவில்லை
தென்றல் மட்டும் தீண்டிச் செல்கிறது
தெருவோர நீர்என் உயிரை காக்கிறது
மன்றம் என்னைத் தாங்கிக் கொள்கிறது
மறையும் இரவது உறவு கொள்கிறது
ஐந்து வயதினில் தாயை இழந்தேன்
ஆராம் வயதினில் பட்டினியடைந்தேன்
பந்துபோல் பலர் உதைத்திட அழுதேன்
பசியைத் தீர்த்திட பலரையும் தொழுதேன்
கஞ்சன் அவனும் என்னைக் கண்டால்
காறி உமிழ்வான் முகத்தின் முன்னே
தஞ்சம் கொடுத்த பூமியில் மனிதர்
தருவது தினமும் வார்த்தைப் பரிசு
காட்டில் மானும் ஒரு பிறவி - அதற்கு
கரடி, புலிகள்போல் இல்லை உறுதி
நாட்டில் நானும் ஒரு பிறவி - எதையும்
நாட முடியாத புதத் துறவி
இன்பம் துன்பம் வாழ்க்கை நியதி
இரவும் பகலும் இயற்கை நியதி
துன்பம் மட்டுமே என் தலைவிதி
துயரை மீண்டிட இல்லை ஒருகதி
No comments:
Post a Comment