வெறுப்புகள் மனங்களிலே தணியட்டும் - மர
வேர்போல அமைதியது பிணையட்டும்
பொறுப்புகள் உரியவரில் பொருந்தட்டும்
போர்புரியும் உள்ளங்கள் திருந்தட்டும்
உறுப்புகள் நல்லதையே செய்யட்டும்
ஊரெங்கும் ஒற்றுமையே தொய்யட்டும்
துடிப்புடனே இளைஞர்கள் உழைக்கட்டும்
துயரற்ற நல்வாழ்வு நிலைக்கட்டும்
பிடிப்புடனே பிள்ளைகள் படிக்கட்டும்
பயனள்ள கல்வியது கிடைக்கட்டும்
முடிப்புடைய ஆசைகள் எட்டட்டும்
முயற்சிக்கு நற்கூலி கிட்டட்டும்
கோத்திரக் கொள்கைகள் ஒழியட்டும் - யாரும்
குலம் ஒன்றென்பதையே மொழியட்டும்
பாத்திரம் தெய்ப்பவரும் மகிழட்டும்
பலம்கொண்ட கரங்களையே புகழட்டும்
சாத்திர சூனியங்கள் அழியட்டும்
சலிப்பற்ற எதிர்காலம் தெளியட்டும்
காட்டினில் மரம்செடிகள் செழிக்கட்டும்
கலங்காத காலநிலை சொலிக்கட்டும்
வீட்டினில் சிரிப்பொலியே உலவட்டும்
விலகிடா வசந்தமதும் நிலவட்டும்
நாட்டினில் நன்மைகளே சூழட்டும்
நலமுடனே மானிடர்கள் வாழட்டும்
No comments:
Post a Comment